> பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி

பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழுவினர் நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.



இலங்கை விமானம் யு.எல். 182 நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து இன்று (15) மாலை 6.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி அங்கிருந்து மொரீஷியஸுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜே.கே. பாய் என்ற நபரின் ஏற்பாட்டில் மொரீஷியஸுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்த நிலையில்,போலியான பயண ஆவணத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று கைது நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால், சந்தேகநபரான இஷாரா மொரீஷியஸுக்கு தப்பிச்சென்றிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன், இலங்கை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா (33), தக்சி நந்தகுமார் (23), தினேஷ் சியமந்த டி சில்வா (49), கென்னடி பஸ்திம்பிள்ளை (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம் ஆச்சிர்ச்சாகே (43) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.